Wednesday 6 May 2015

நீ நான் மழை

குடை வாய்க்கப்பெறாத ஓர் மழைநாளில்தான் நிகழ்ந்தது நம் முதல் சந்திப்பு. என்மீது உன் பார்வை பட்டுத்தெறிக்கிறது உதிர்ந்து தெறிக்கும் மழைத்துளிகளுக்கு இடையில். என்னை நனைத்து வழியும் துளிகளுக்கிடையில் தயக்கத்தில் உன்னை நிமிர்ந்து பார்க்கையில் கடையோடும் புன்னகையோடு ஒதுங்கி வழிவிடுகிறாய்.

தயக்கத்துடன் உன் வீட்டினுள் நுழைகையில் ஈரத்தில் உண்டான பாதச்சுவடு பற்றி பின் வருகிறாய். அனிச்சையாய் நீட்டும் பூத்துவாலை பற்றி ஒத்தி எடுக்கையில் கணம் தாளாமல் அதனுடன் சேர்ந்தே நழுவுகிறது நிகழ்காலமும்.

"காபி போடும்மா குளிருது "  என்றவாறே எனக்கு பிடித்த "காதல் ஓவியத்தை" கசிய விடுகிறாய். "இந்த மழை விடாது போல" என்று உன் அம்மா  உரைக்கையில் எந்த சொற்களையும் தேடி அலைய அவசியமின்றி என்மீது பார்வையை மட்டும் திருப்பி உயிரின் ஆழத்தை உற்று நோக்குகிறாய்.

வெளிவரா வார்த்தைகள் தொண்டைக்குழியில் ஊசலாட மழையை கண்களால் விழுங்கத்துவங்குகிறேன். மழை வாசல் தாண்டி என்னுள் இறங்கத்துவங்குகையில் வானவில்லாய் மனது வளைந்து உன்னைத் தொடுகிறது.

பருகி முடித்த தேநீர் கோப்பையினை விரல் தீண்டி வாங்குகையில் ஈரம் தோய்ந்த உடலெங்கும் வேகமாய் பரவுகிறது அதிர்வலைகள் . உலர்ந்து போன இதழ் பிரித்து கிளம்புகிறேன் என கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டு நகர்கிறேன் .

ஒவ்வொரு துளிகளையும் மறுக்காமல் ஏந்திக்கொள்ளும் நிலம் போலவே என்னை இன்றும் ஏந்திக்கொள்கிறாய். ஒவ்வொரு நாளும் புதுமுகம் காட்டும் மழையாய் நானும் , சலிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நெகிழ்நிலமாய் நீயும் என  இன்றும் நீ , நான் , மழை, ஒரு தேநீர் கோப்பை தேநீர் என சலியாமல் தொடர்கிறது வாழ்வு .

1 comment: