Sunday 11 October 2015

சிறகுகளை நம்பி ...

காலை குளிருக்கு பயந்து வீட்டின் வாசல் திறக்காமல் வேலைகள் அனைத்தும் முடிந்தது.இனி சற்று நடப்பதா இல்லை இன்னும் சிறிது வெளிச்சம் வரும்வரை முகநூலுக்கு போகலாமா என்ற யோசனையில் அலைபேசியை கையில் எடுத்து அமர்கிறேன்.

        ஜன்னல் கம்பில் வந்து அமரும் சிட்டுக்குருவி கவனம் ஈர்க்கிறது .அதனிடம் ஏன் குளிர், மழை பற்றிய முணுமுணுப்பு இல்லை என யோசிக்கிறேன்.

         பறவைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதன் பறத்தல் மட்டும் இல்லை போலும் .அதன் இடைவிடாத பயணம், தடை தாண்டிப் போகும் அதன் முயற்சி , இயல்பு மாறாத அதன் களிப்பு யாவும்தான்!

   பறவை கிளைகளை
     நம்பி அமர்வதில்லை....
   தன் சிறகுகளை நம்பி .....

குடை பிடித்தாலும் பாதம் தொடும் ...

மழை
வானத்தின்
கொடைதான்......

ஒரு போதும்
மறுக்க இயலாது
மழையை .....

குடை பிடித்தாலும்
பாதம் தொடும் !.....

சொற்கள்...

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். அது தானியத்தை போன்றது.விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு விதையாகவும் மாறுகிறது .விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது ...

கவிதைக்காரா ...

இவ்வளவு குழப்பம் ஏன்
கவிதைக்காரா ?.....

எனக்கென தினம் எழுதும்
கவிதைகளை விடவா
எனக்கோர் பெயர் சூட்டுவதில்
சிரமம் உனக்கு?....

ரயில் பயணங்களில் ...

ரயில் நிலையத்தின் வாசல்
கனவின் நுழைவாயிலாகவே
தெரிந்தது எனக்கு....

அது என்னை எங்கேனும்
அழைத்து செல்கிறதா
இல்லை திரும்பவும்
அழைத்து வருகிறதா ...

ரயில் நகரும் போது
மனமும் சேர்ந்தே நழுவிச்செல்கிறது...

ரயிலும் வசீகரமாகவே
தொடர்கிறது தன்
பயணங்களை.....

Friday 9 October 2015

என் மீதான நேசத்தின் ...

என் மீதான
உன் நேசத்தின்
கேள்விகள்
உன்னிடத்திலும் ......

அதற்கான பதில்கள் என்னிடத்திலும்
பத்திரமாய்
இருக்கட்டுமே!.....

உன்னிடம் பேசப்போவதில்லை.

உன்னிடம்
    பேசப்போவதில்லை.....

என்பதில் இருந்தே.
    துவங்குகிறது
         நம் உரையாடல்கள்....

சொட்டும் ப்ரியங்கள்

வீடெங்கும்
உதிர்ந்து கிடக்கும்
காரைகள் போலவே ...

என் இயலாமைகளில்
உதிர்ந்து போகையிலெல்லாம்
தோள்களில் தாங்குகிறாய் ....

உன் வார்த்தைகள்
ஒவ்வொன்றிலும்
சொட்டிக்கொண்டே
இருக்கிறது ...

என் மொத்த உலகின்
வாழ்தலுக்கான
உயிர்த்துளிகள் ...

!!!

மொழியற்ற மௌனங்களை
தந்துவிடுகிறாய்
இல்லை
நீளும் உரையாடல்களில்
மூழ்கடிக்கிறாய்
இயல்பாய் மட்டும்
இருக்கவே முடிவதில்லை
உன்னிடம் ...!!!

!!!

என் இருப்பை உனக்கு
உணர்த்திக் கொண்டிருந்த
அந்த ஒற்றை சொல்லை
தவறவிட்ட கணத்தில்தான்
தொலைந்திருக்கக்கூடும்
என் சிறகுகளும்
சில வர்ணங்களும் ...!!!

!!!

கோபங்களை
போல அல்லாது
அத்தனை எளிதாய்
வெளிப்படுத்த
முடிவதில்லை
ப்ரியங்களை ....

!!!

முதல்முறையாய்
           தோன்றுகிறது ...!!!

அனிச்சையாய்
குதூகலிக்கச் செய்யும்
இம்மழை வாராதிருந்தால்
சற்று தேவலாம் ...!!!

!!!

என்ன சமாதானம் சொல்லி
               அழைத்து வர????

பிடிவாத மழலையாய்
உன் கடைசி வார்த்தைகளில்
தேங்கி நின்று விட்ட
மனதினை ...!!!

அதீத குளிர்ச்சியும் ...

அதீத குளிர்ச்சியும்
சுடும் என்பது
உயிர் வரை
உறைக்காமலே
போயிருக்கும் ....

நீ அளித்த
சில முத்தங்களும்
பயந்து பயந்து
நான் கொடுத்த
ஓர் முத்தமும்
உணரும் தருணம்
கொஞ்சம் காலத்தின்
பக்கங்களில்
நழுவி விட்டிருந்தால்....!!!

கல் வனமாய் ....

பிரிவினை அறிவித்துக்கொண்டே
இருக்கிறாய்...
பறவையின் சிறகென
உதிரச்செய்யவே
பெருமுயற்சி கொள்கிறாய் ...

ஊடுறுவும் குளிர் பனியில்
இறுகப் பற்றும் போர்வை போல
உருகிக் கசியும் துயர்தனை
அழுந்தப்பற்றிக் கொல்கிறது நினைவு...

உன்னிலான என் ப்ரியங்களின்
மீதான வனமெங்கும்
அழுந்த எழுப்புகிறாய்
பிரிவுகளின் நெடிதுயர்ந்த மதில்களை...

எதைக்கொண்டும் உடைக்க
எத்தனிக்காது வலிநுகர்ந்தபடியே
உன் அரணுக்குள் உறைகிறேன்
ஓர் கல்வனமாய் ...!!!

பொதுவில் பெய்யும் இம்மழை ...

நீயும் நானும்
கனத்திருந்த
பொழுதொன்றில்
சில சொற்களும்
மௌனங்களுமாய்
தர்க்கமற்று
உறைந்திருந்தோம்...

நனைக்கவோ
துடைக்கவோ
பொதுவில் பெய்கிறது
இப்பெருமழை ...!!!

ரக்‌ஷா பந்தன் ....

அண்ணணின் பத்தாத சட்டைகளை நாகரீக உடையென போட்டுத் திரிந்திருந்த தினங்களும் ...

அவன் ஹீரோவாய் வலம் வந்த ஹெர்குலிஸ் என்னுடையதாய் மாறியிருந்த தினமும் ...

என் சிரிப்புகளுக்காய் தாயக்கரங்களில் பகடைகளை தெரிந்தே பலி கொடுத்திருந்த தினங்களும் ...

மாமன் மகள்களுக்கிடையில் ஒற்றையனாய் சிக்கிக்கொண்டு குறுவெட்கத்தோடு மாட்டியிருந்தவனை ரசித்திருந்த தினங்களும் ...

தகப்பனாய் நின்று கரம் பிடித்து கொடுத்தவன் தோள்சாய்ந்து நான் மட்டுமே அழுது கிளம்பிய தினமும் ...

கண்விழித்து காண்கையில் கையில் மகளை ஏந்தியவண்ணம் அழுது சிவந்திருந்தவனை உருகியவண்ணம் கண்ட தினமும் ...

என இவ்வாறான தினங்கள் இவ்வளவு எளிதாய் வருடம் ஒருமுறை நினைவூட்டும் இந்நாளைப்போல வாய்த்துவிடுவதில்லை ...

feeling loved ...

ஒரு கொட்டுக்காரனின்
முதல் அடியிலிருந்தோ
நாயனக்காரனின்
உதட்டுச் சுழியிலிருந்தோ
துவங்கிடும் திருவிழாக்கள் போலவே

உன் பெயரை யாரேனும்
உச்சரிக்கக் கேட்கையில்
துவங்கிவிடுகிறது ...
feeling loved ம்ம் ...

துளித்துளியாய் ...

கோடிட்ட இடங்களை
நீயே நிரப்பிக்கொள்
என்கிறேன் ....

துளித்துளியாய்
எனை நிரப்பத்
துவங்குகிறாய் ...!!!

ஈரம் உறிஞ்சும்
காகிதமாய் உனை
உறிஞ்சத் துவங்குகிறேன் ...!!!

!!!

உன்னைப் போலதான்
ஏனோ தானோ
என தூறிக்கொண்டிருக்கிறது
இந்த மழையும் ...!!!

!!!

அப்பிக்கொள்வாய்
என்ற அச்சத்தினூடே
உனை கடக்கையில்
சொட்டிவிடுகிறது
சில எச்சங்களின்
வர்ணங்கள் ...

!!!

ப்ரியங்கள் ஒளித்து
வைக்கும்
பெருமுயற்சியனைத்தும்
மண்ணில் ஊன்றிய
விதையெனவே
வேர் விடுகிறது ...!!!

ப்ரியங்களின் வாசனை ...

உனை நினைவூட்டும்
ஜன்னலோரப் பயணங்களை
தவிர்க்க நினைத்தாலும்
வாய்த்தும் கனத்தும்
விடுகின்றன சமயங்களில் ...

தூரத்து மலையும்
தாழ மிதக்கும் மேகமும்
திறந்தே வைக்கிறது
பிரியங்களின் வாசனைகளை ...

சதா ஏதோ ஓர் பாடலை
முணுமுணுக்கும் மழையும்
இன்று ஏனோ நமக்கான
பாடலையே இசைக்கிறது ...!!!

ஒற்றை வளைவில்...

அந்த ஒற்றை வளைவில்
உன்னை நிறுத்திவிட்டேதான்
திரும்பிப் பாராமல்
நடக்கிறேன் ....

உடைக்காமல்
பார்த்துக்கொள்ளச் சொல்லி
கேட்டுப் பின்துரத்தும்
வார்த்தைகளை என்ன செய்ய ??...

லவ் யூ யவனி ...

சின்னச் சின்னதாய்
முத்தப்பூக்களிலும்...
தேர்ந்தெடுத்த சொற்களோடு
ஒரு பிறைச்சிரிப்பிலும் ...
வெறுமனே வானமெங்கும் நிறம்
மாற்றத் துவங்குகிறாள் ...
இன்னும் கொஞ்சம்
கோபம் விடாது காத்திருந்திருக்கலாம் ...

#லவ் யூ யவனி #

செல்ல கோபங்கள் ...

மோவாய் பற்றி
முகம் திருப்பும்
சமாதானங்களில்

திரும்பிக் கொள்கிறது
காத்திருத்தலுக்குப் பிறகான
செல்லக் கோபங்கள் ...!!!

உயிர் பற்றிக்கொள்கிறேன் ...

கடவுள் தரிசனத்திற்காய்
உயர்த்திக் காட்டுகையில்
இறுகத் தோள்பற்றும்
குழந்தையெனவே
சமயங்களில் உன்
உயிர் பற்றிக்கொள்கிறேன் ...!!!

ஸ்நேகம் ...

கேட்கப்படாத
மெல்லிசைக்குள்
உறைந்திருக்கும்
நிசப்தங்கள் போலவே

பேசிட ஏதுமற்ற
தருணங்களிலும்
பூத்துக்கொண்டிருக்கின்றன
ஸ்நேகங்கள் ...!!!

தேவதை ...

தேவதை
என்றுரைத்துவிட்டாய்
வேறு வழியில்லை
சிறகுகளும் தந்துவிடு ...!!!

திகட்டிவிட்டாய் ...

திகட்டிவிட்டாய்
என சீண்டிய
கணங்களைப் போல
அவ்வளவு எளிதாய்
உணர்த்தமுடிவதில்லை
தீர்ந்து விட்டிருந்த
கணங்களை ...

Thursday 8 October 2015

தோழமை...

மழை இரவுக்குப் பின்னான
விடியல் போலவே
அழகாகத்தான் இருக்கிறது

நினைத்ததெல்லாம்
பேசிவிடும் தோழமையொன்று
வாய்க்கப் பெறுகையில்

இன்றைப் போலவோ
நாளை இன்னும் அழகாகவோ
இருக்கக் கூடும் ...!!!

லவ் யூ யவனி...

நனைந்து விடக் கூடுமென
அப்பாவின் தலையில்
துப்பட்டாவால் முக்காடிட்டு
ஏந்திய மழைநீரை விசிறியவளை
பிடிக்க எத்தனிக்கையில்
நெட்டித் தள்ளிவிட்டு
மழையினூடே ஓடியவாறு
பழிப்பு காட்டுகிறாள்
யவனி குட்டி...
நனையத் துவங்குகிறது
மழை ...

பச்சையங்கள் கூடித்திரியும் மனது

மனக்குருதி பருகக்
காத்திருந்த யட்சங்கள்
ஏமாற்றமடைந்தே
சபிக்கின்றன ...

ரணங்கள் கீறக் காத்திருந்த
ஆயுதங்களெங்கும்
துருவென படர்ந்திருந்தன
தோல்வியின் சாயங்கள்...

மண்டியிட வேண்டிய
அவசியமின்றி ஆழ்கடல்
மௌனமென இதயத்தின்
நான்கு அறைகளும் ...

இலைகள் உதிர்தலை
ஏற்றுக்கொள்ளும்
மரமென பச்சையங்கள்
கூடியே திரிகிறது மனது ...

தணிப்பதற்காய் வந்த மழை
தணித்தே செல்கிறது ...
திரியும் இந்நிலவும்
தூவியே செல்கிறது சௌந்தர்யங்களை ....!!!

நீங்கள் நீங்களாகவே ...

புன்னகைக்க
விரும்பிய
கணங்களில்
ஆராயத்துவங்குகிறீர்கள் ...

நேசத்தின் பொருட்டு
நானற்ற ஒன்றில்
நானாய் மாற
முயற்சிக்கிறீர்கள் ...

நீங்கள்
நீங்களாகவே
இருந்து
விடுங்களேன்...!!!

மிஸ் யூ...

நிரப்பாமல்
விடப்படும்
ப்ரியங்களை
நிரப்பிவிடுகிறான்
மிஸ் யூ க்களில் ...!!!

மழை மாலை பொழுதுகளுக்காய் ...

இன்னும் கொஞ்சதூரம்
நீண்டிருக்கலாம் அம்மலைப்பாதை ...

இன்னும் சிலபாடல்களை
உயிர்பித்திருக்கலாம் ...

இன்னும் ஸ்வாரஸ்யங்களை
கொண்டாடி இருக்கலாம் ...

இன்னும் பகிரப்படாமல்
மீதமிருக்கும் ப்ரியங்கள்
காத்திருக்கிறது மற்றுமோர்
மழை மாலை பொழுதுகளுக்காய்....

வழியும் ப்ரியங்கள் ...

பொத்திப் பொத்தி
வைத்துக்கொள்வேன்
உன்மீதான அன்பை
என்னால் நீ என்னுள்
விழுந்துவிடக்
கூடாதென்று ...

இருந்தும் என்னிலிருந்து
எப்போதாவது பெருகி
வழிந்து விடுகிறது...
உன்னுடைய  ம்ம் க்களிலும்... அப்படியாக்களிலும்...!!!

வழியும் ப்ரியம்
கொண்டே நிரப்பிவிட
முயல்கிறேன்
தூர இடைவெளியை....

ப்ரியங்கள்  வழிந்துகொண்டே நிரம்பிவிடுகிறது
நமக்கான இடைவெளிகள்....!!!

காற்றுக்குமிழி ...

எந்த நேரமும்
உடைபட காத்திருக்கும்
காற்றுக்குமிழியாய்
வெளியெங்கும்
சுற்றி அலைகிறேன் ....

உயிர்த்துளி ஒன்றினை
சொட்டிவிட்டுப் போ
உடைபட ....!!!

தீ விழுந்த வனமாய் ...

மிச்சம் இருக்கப்
போவதில்லை எதுவும்...
தீ விழுங்கித் தொலைந்து
கொண்டிருக்கும் வனமாய்
காணாமல் போய்க்கொண்டே
இருக்கிறது நமக்கான
உள் அரட்டைபெட்டி அரட்டைகள் ....

ஒருவேளை மிஞ்சியிருக்கலாம்
உரைகளில் அனுப்பாமல்
ஒளித்து வைத்துக்கொண்ட
சில தவிப்புகளும்...
வெட்கமற்று அனுப்பிய
முத்த ஸ்மைலிகளிக்கிடையே
வெட்கப்பட்டு அனுப்பிய
சில ம்ம்ம் களும்...!!!

ரசித்துக் கொண்டிருக்கிறேன் ...

தோற்றவளாய் ரசித்துக்
கொண்டிருக்கிறேன் ....

என்னில் தொலைந்துவிடக் கூடாதென
நீ எடுக்கும் பிரயத்தனங்களில்
தோற்கும் தருணங்களை ...

எனக்கான ப்ரியங்கள் ...

ஒப்பனைகளோடு
உன்னிலிருந்து
வெளிப்படும் வார்த்தைகள்
ஒவ்வொன்றின்
கூர்முனைகளிலும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
வலிகளில் தோய்ந்த
எனக்கான ப்ரியங்கள் ....

பட்டுப்போதலே துயரற்றது ...

பொழிந்து விட
ஆயத்தமாய் கருமேகங்களாய்
சூழ்ந்து நிற்கிறாய் ...

நனைக்காமலே சென்றுவிடு
பட்டுப்போதலே துயரற்று இருக்கும் ...

தொலைந்தே போகிறேன் ...

பேச்சில் நிரப்பிக் கொண்டே இருக்கிறாய்...
நினைவில் இழை இழையாய்
நெய்தபடி இருக்கிறாய்...
உள்ளே ஊடுருவி அறுத்துக்கொண்டே இருக்கிறாய் ...
தொலைந்தே போகிறேன்
விட்டு விடேன்...

பள்ளிக்கூடம் ...

கடக்கும் ஐந்து விநாடிகளில்
நம் பால்யத்தை
மீட்டெடுத்து விடுகிறது
நம் பள்ளிக்கூடம் ....

நாம் வழக்கமாய் அமர்ந்துண்ட சரக்கொன்றை மரமும் ...

நம் சண்டைகளையும் சமாதானங்களையும் இன்றுவரை வெளிச்சொல்லா மாதா சிலையும் ...

உனக்காய் நான் தினம் காத்திருக்கும் இடத்திலிருந்து உன் வீடு நோக்கிப் பிரியும் சாலையும் ...

என ஏதும் மாறாமல் இருக்க
இங்கு உனக்கான ஓர்
வாழ்த்துச் செய்தியோடு
பால்யத்தை கடந்து விட்டிருக்கிறேன் நான் ...

லவ் யூ யவனி...

மழைக்கு முன் உணரும்
ஓர் அடர் வெக்கையெனவும்
சிவந்து போன அந்திவானமாய்
அயர்ந்து போய் அரூபமாய்
சுழற்றியடிக்கும்
எண்ணங்களுக்கிடையில் ...

அவள் பின்னங்கழுத்தின் கீழான
பூனைமுடிப் பிரதேசங்களில்
முகம் புதைத்துக் கொள்கிறேன் ...

திரும்பாமல் அனிச்சையாய்
கை பற்றி கோர்த்துக்கொள்ளும்
நொடிகளில் மனத்துரு உதிர்த்து
கதை பேசத் துவங்குகிறேன்
தேவதையின் சிறகேறி...

#லவ் யூ யவனி ...

!!!

என்னை விட்டுவிடு
என்கிறாய்
வெற்றிடங்களையும்
நிரப்பிக்கொண்டே ...!!!

வட்ட வட்ட சலனங்களில் ...

தவிர்க்க நினைக்கும் நினைவுகள்
எதிரொலித்து கல்வீசி
உண்டாக்கும் வட்ட வட்ட
சலனங்களில் தொலைந்து கொண்டே
தேடிக்கொண்டிருக்கிறேன்
வாழ்தலையும் தொலைதலையும்
ஒரு சேர திறக்கும் சாவிதனை ...
இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...

உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!

கவண் பொருந்திய சொற்களை ...

இப்போதைக்கு
பட்டாம்பூச்சியின்
சிறகுடைக்க
நீயற்று நனையும்
மழைத்துளியே
போதுமானதாயிருக்கிறது ...

உன் கவண் வில்லில்
பொருந்திய சொற்களை
பத்திரப்படுத்து
பிறிதொரு கார்காலமற்ற
கடின பொழுதுகளுக்காய்... !!!

ப்ரியங்கள் குழைத்தோடும் ...

ப்ரியங்கள் குழைத்தோடும்
நதியில் மிகக் கவனமாய்
கால் நனைக்காது
தடங்களை விட்டுச் செல்கிறாய் ...

தடுமாறி நின்றவனும்
உணர்ந்திருக்கக் கூடும்
புரிதலுக்குப் பின்னான
பிரிவின் வலியை ...!!!

மறுத்துக்கொண்டே சரி என்கிறேன் ...

அலையின் ஓய்வற்ற
இரைச்சலின் மேல்
வெறுமை கொண்டலையும்
ஓர் வண்ணத்துப்பூச்சியாகவே அலைந்து கொண்டிருக்கிறேன்...

கொட்டும் பெருமழையாய் வீழ்பவனை கைகளில் ஏந்திக்கொள்ளும் பிரயத்தனங்களில் கண்களில் பொருத்திய கண்மை கரைப்பதே இலட்சியம் உனக்கு...

கதகதப்பிற்காய் ஏங்கும் பூனைக்குட்டியை ஒத்தவளாய்
உன் கைவிரல்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறேன் தேர்ந்தெடுக்கப்பட்ட உனதான
சில வார்த்தைகளோடு ...

நமக்கென பெய்யும் மழையில் நீயின்றி நனைந்தும்
உன் பிடிவாத விலக்கல்களில்
துளி கண்ணீரிட்டு அதில் அழுத்தமாய் தீவிரமாகவே உன்னை எழுதிக் கொள்கிறேன்...

அர்த்தமற்று எழுதியும் பேசியும் திரிந்து கொண்டிருந்தவள்
கனத்த மௌனங்களில் தவிப்புடன் சில சொற்களை பத்திரப்படுத்த கற்றுக்கொண்டது எப்போது...

உடையக்கூடாதென்ற கவனங்களில் உடைத்தும் விடுகிறாய்
அதீத ஸ்நேகத்தில் அதீத வெறுமையிலும் ஊசலாடிக்கொண்டே மறுத்துக்கொண்டே சரி என்கிறேன்...

Sunday 5 July 2015

இங்குதானே இருக்கிறேன்

இங்குதானே இருக்கிறேன் ....

இலக்கற்று நீ இறகாய்
அலைந்து கொண்டிருக்கையில்
காற்றாய் ....

காற்றால் உலுக்கப்பட்டு
சிணுங்கும் கிளைகளாயிருக்கையில்
உனைத்தாங்கும் வேராய் ...

வேராய் நீ
வலிகொண்டிருக்கையில்
உனை நனைக்கும் மழையாய் ...

பிரவாகமாய் நீ
வெளிப்படுகையில்
உடைபடும் கற்களாய் ....

உன் பயணங்களில்
நீ ரசிக்கும்
ஜன்னலோர இருக்கையாய் ...

உன் கவிதை பக்கத்தில்
நீ அடையாளமிட்ட
மயிலிறகாய்...

என்னைத்தேடி நீ
வெளியெங்கும் அலைகையில்
உன்னில் தொலைந்தவளாய் ....

இங்குதானே இருக்கிறேன் ...

Sunday 21 June 2015

வாழ்தலை அளிப்பள்

பாலையில்
தனித்திருப்பவனுக்கு
ஒற்றை மரம் தரும்
வாழ்வின் மீதான
நம்பிக்கையை
தருபவளல்ல அவள் ...

பற்றற்று
தனித்திருக்கையில்
நெற்றி கேசம் வருடி
முத்தமிட்டுச் செல்லும்
காற்றாய்
வாழ்தலை அளிப்பவள்
அவள்....!!!

Thursday 18 June 2015

அப்பாக்களின் தினம்

அப்பா என்ற உறவை இப்படித்தான் இருந்திருக்கக்கூடும் என உணர்வாய் உணர்ந்திருக்கிறேனே ஒழிய அனுபவப்பூர்வமாய் உணர்ந்ததில்லை.அப்பாவின் பத்திரப்படுத்தப்பட்ட துணிகளிலும், டைரிகளிலும், தொங்கு மீசையில் கர்வத்துடன் சிரிக்கும் போட்டோக்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை .

அப்பாவின் உயிரின் துளியில் விதைக்கப்பட்டும் ஆதரவாய் பொத்தி வளர்க்கப்பட்ட வரம் வாய்க்கப்பெறவில்லை. அப்பா கை பிடித்து பள்ளிக்கும் , கால் பிடித்து மணவறைக்கும் சென்றதில்லை.

ஒவ்வொருமுறையும் அப்பாவிற்கு திதி அளிக்கையிலும் பொண்ணா பிறந்து திதி குடுக்கறா பாரு அப்பனைப் போலவே தெனாவட்டு என்போரின் வசவுகளிலும், ராஜ் அண்ணா போலவே குரலும் தெளிவும் என்ற அத்தைகளின் பாராட்டுகளிலும்,    அப்பனைப் போலவே எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு என் உயிர வாங்க பொறந்திருக்கு பாரு என்ற அம்மாவின் புலம்பல்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை.

என் பிள்ளைகள் இன்றைக்கு பள்ளி கிளம்புகையில் எல்லாம் அடிக்கடி அம்மா சொல்வது உங்க தாத்தா அந்தகாலத்துலயே ஏற்காடு மான்போர்ட் ஸ்கூல்ல படிச்சாரு தெரியுமா ? சென்ற வருடத்தில் ஓர்நாள் அம்மா நாளைக்கு ஏற்காடு பிக்னிக் போறோம் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பிட்டாங்க. அப்பா படிச்ச ஸ்கூல் வாழ்ந்த எஸ்டேட் எல்லாம் பாத்துட்டு வந்ததும் அம்மா ரெண்டுநாள் இருந்த அமைதி பயத்த உண்டாக்கிடுச்சு.

உனக்கு சாவித்ரினு பேர் வைக்கனும்னு கெஞ்சுனேன் உங்கப்பாட்ட அப்புறம் எல்லோரும் சாவி சாவி என் பொண்ண கூப்பிடுவாங்கன்னு சக்தினு வச்சாரு அப்டின்னு இன்னமும் சலிச்சுப்பாங்க அம்மா. அண்ணணும் இறந்துபோன இரண்டாம்நாளில் நீ கூட என் பையன காப்பாத்தி குடுக்கலயேன்னு அப்பாவ திட்டிட்டே பழைய டிரங்கு பெட்டில இருந்த அவரோட பொருள் அவ்வளவையும் அம்மா தீயிட்டு கொளுத்துனப்பாதான் அப்பா செத்துப்போனதா நினைச்சு முதன்முதலா அழுக வந்துச்சு .

முதிர்ந்த மரத்தின் வேர்கள் போல் மண்ணில் ஊன்றவும் பெருத்த பறவையின் சிறகுகள் போல் விண்ணில் அலையவும் என் தகப்பன்தான் கற்றுக்கொடுத்தான் அப்படின்னு எங்கயோ படிச்சுருக்கேன். அந்த விஷயத்துல என் பொண்ணுங்க மாபாக்யசாலிங்க.

Tuesday 16 June 2015

கொன்று விடலாம் என்றிருக்கிறேன்

கொன்று புதைத்துவிடலாம்
என்றிருக்கிறேன் ...

கசியும் ப்ரியங்கள்
வழித்தெடுத்து
கண்ணிமைகளால்
என் உயிரெங்கும்
வர்ணம் பூசும்
காதல் விடுத்து ...

வேள்வி கண்ட
யாகசாலை போல்
மனம் தகிக்கையில்
உன் நெஞ்சுக்கூட்டில்
புதைத்திறுக்கி
உயிர் நெய்யும்
தருணம் தவிர்த்து ....

இதழ்களில்
நீ எழுதும்
வார்த்தைகளை
கொன்றுப் புதைக்கலாம்
என்றிருக்கிறேன் ...!!!

Wednesday 10 June 2015

ஒற்றைச்சொல்

நீ வீசி எறியப்போகும்
ஒற்றைச் சொல்லுக்காய்...

ததும்பி வழிய
காத்திருக்கிறது ...
கரை கட்டி நிற்கும்
மனக்குளம்...

அதிகபட்சம்
நாநுனியில்
என் பெயரையாவது
உச்சரித்து விட்டுப்போ...!!!

Monday 1 June 2015

மரணம் மிக சுலபம்

ஒரு மனிதனின் பெரும் நம்பிக்கைகளும் கனவுகளும் கலந்து உருவான வாழ்க்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலரது அலட்சியத்தாலும் அவசரத்தாலும் வாகன விபத்தாக மாறி அவனை அழித்துவிட்டிருக்கிறது. வாகன விபத்துகள் குறித்த அச்சம் மேலோங்கி நிற்க காரணம் என்ன?

    எதிர்பாராமல் நிகழ்ந்தது சாலை விபத்துக்களா இல்லை சாலை பலிகளா? செத்துக்கிடப்பவன் எத்தனை கனவுகளுடன் சென்றிருப்பான்? எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்வை இறுகப் பற்றியிருப்பான்? எதற்காக இவன் உயிரிழந்திருக்க வேண்டும்? இவன் உயிர் நீங்கி தேவையற்ற பொருளாய் இங்கு கிடக்க வேண்டிய காரணம் என்ன?

எதற்கு அம்மா அழுகிறாள் என அவளைத் தேற்றும் மூத்தவளையும் , ஏதும் அறியாமல் கம்பியில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இளையவளையும் கண்டு, மீதமிருக்கும் வாழ்வின்மீது பெரும்பயம் கொண்டவளாய் விடிய விடிய ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கிறாள் ஜீவனற்ற விழிகளோடு.

எந்த கேள்விகளுமற்று நழுவிச் செல்லும் கணங்களுக்கு இடை இடையே எழும் ஒப்பாரிச்சத்தங்களும் , விபத்து குறித்த படங்கள் அலைபேசியில் பரிமாறப்படுதலும், பேசிப்பேசி மாய்ந்து போகும் உறவுகளுக்கு இடையிலும் நகர்கின்றன நிமிடங்கள் .

இரண்டாம் முறையாய் பிணவறை வாசலில் உறவுகளால் மஞ்சள் அப்பி பூச்சூடி திலகமிடப்பட்டு அலங்கரிக்கையில் அவளும் உயிரற்றவளாகவே அமர்ந்திருக்கிறாள் . உள்ளிருந்து உடல் பிளக்கும் சப்தம் வெளிக்கசிகையில் அனைத்து முகங்களிலும் துயர் கசிகிறது .

நிற்கும் வாகனங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட அதில் ஒன்றினை பாய்ந்து வாங்கி அதிலிருக்கும் அவன் படத்தை வெறிக்கிறாள் அவள். அப்பாவ என்கிட்ட குடு நான் பத்திரமா வச்சுக்கறேன் என்றவாறே எட்டாய் மடித்து சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறாள் மகள்.

இனி அவர்கள் எதிர் கொள்ளும் கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைக்க அவர்கள் படப்போகும் பெருந்துயரமும் , அவமதிப்பும், வலிகளும், பற்றின்மையும் அவன் இறப்பை விட வலி மிகுந்ததாய் இருக்கக்கூடும் . வாழ்வின் மீதான பற்றுதல்களை இந்த சாலை விபத்து ஓர் நிமிடத்தில் அபத்தமான ஒன்றாக மாற்றிவிட்டிருக்கிறது. மரணம் மிக சுலபம் போல .

எல்லாம் முடிந்து வெளிவந்து புகைகூண்டில் இருந்து வெளியேறும் கரும்புகை காண்கையில் உயிரும் இவ்வாறே எந்த சப்தமும் சலனமும் இன்றி வெளியேறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஒலிபெருக்கியில் கசிகிறது" பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே?

Tuesday 19 May 2015

விலகாமல் நீ

கிளைகளை உலுக்கி
ஓய்ந்து போகும்
காற்றாய் நீ....

விலகிப்
போவதில்லை...
அடங்கித்தான்
போகிறாய்...!!!

எதிர்கொண்டே
காத்திருப்பேன்
எக்கணமும்
உதிர்ந்து போய்விட ...!!!

Monday 11 May 2015

மிரண்ட விழிகளுடன்
தயங்கி நுழையும்
ஓர் பூனை போலவே
உன் கோட்டைக்குள்
பிரவேசிக்கிறேன் நான்......

நுழைந்த மறுநொடியில்
கபளீகரம் செய்யும்
அரக்கனாய் மாறி
உன் உரையாடல்களில்
விழுங்க விழைகிறாய் நீ .....

உன் நட்பை விரும்புகிறேன்
என்றுரைக்கும் கணத்தில்
சரியத் துவங்குகிறது
உன்னை மறைந்திருந்த
மாயக்கோட்டைகள்.....

Friday 8 May 2015

பரிசுத் திட்டங்கள் ....

துவங்கி விட்டது பரிசுத்திட்டங்களைப் போன்ற வசீகரமான அறிவிப்புகள் . சுயம் அற்றுப் போய் வரிமாறாமல் எழுதக் கற்றுக்கொண்டவர்கள் , இன்று பள்ளிக்குத் தேடித்தந்த பெருமைகளால் அடுத்துத்து வளமான கல்விக்குத் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த வருட பத்தாம் வகுப்பில் 490 எடுப்பவர்களுக்கு கல்விக் கட்டணமும் விடுதிக் கட்டணமும் முற்றிலும் இலவசம். மற்றவர்க்கு விடுதிக் கட்டணத்துடன் சேர்த்து 180000 மட்டுமே வருடம் ஒன்றுக்கு.

விடுதியில் சேர்க்கும் பட்சத்தில் காலநேரம் இல்லாமல் படிக்கச்சொல்லி இம்சித்தல், மதிப்பெண் விளைவிக்கும் இயந்திரங்களாய் மாற்றல், குழந்தைகளின் இயல்பான மனநிலை மாற்றியமைத்தல் போன்ற சிறப்பு சலுகைகள் உண்டு. சலுகைகளை பெற விரும்பாத பெற்றோர்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக காரணம் சொல்லி வெளியேற்றப்படுவர்.

இதையெல்லாம் தாண்டி பகீரதப் பிரயத்தனம் செய்து 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பதினேழு வயதிலேயே நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் பணத்தை பெற்றோருக்கு மிச்சப்படுத்தித் தரலாம் என்பது கூடுதல் சலுகையாம் .

இதற்கு ஆரம்பகட்டமாய் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சராசரி கற்றல் திறன் கொண்ட மாணவர்கள் துண்டிக்கப்படுவர். அடித்தட்டு மாணவர்களுடன் பழக வாய்ப்பற்றுப் போன அவர்கள் நாளை மருத்துவர்களாகவும் , பொறியாளர்களாகவும் மாற்றப்பட்டு நாட்டின் தூண்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக மாறுவர்.

இதையெல்லாம் சரியாக புரிந்துகொண்ட பெற்றோரின் வாகனங்கள் நாளை முதல் பள்ளியை நோக்கி படையெடுக்கப் போகிறது. இரண்டாண்டுகள் பணம் செலுத்தி டியூசன் சென்டர்களாய் மாறிப் போன வகுப்பறைகளில் அடமானப் பொருளாய் தங்கள் பிள்ளைகளை மாற்றப் போகின்றனர்.

வாழ்த்துவோம் நாமும் .....

Wednesday 6 May 2015

நீ நான் மழை

குடை வாய்க்கப்பெறாத ஓர் மழைநாளில்தான் நிகழ்ந்தது நம் முதல் சந்திப்பு. என்மீது உன் பார்வை பட்டுத்தெறிக்கிறது உதிர்ந்து தெறிக்கும் மழைத்துளிகளுக்கு இடையில். என்னை நனைத்து வழியும் துளிகளுக்கிடையில் தயக்கத்தில் உன்னை நிமிர்ந்து பார்க்கையில் கடையோடும் புன்னகையோடு ஒதுங்கி வழிவிடுகிறாய்.

தயக்கத்துடன் உன் வீட்டினுள் நுழைகையில் ஈரத்தில் உண்டான பாதச்சுவடு பற்றி பின் வருகிறாய். அனிச்சையாய் நீட்டும் பூத்துவாலை பற்றி ஒத்தி எடுக்கையில் கணம் தாளாமல் அதனுடன் சேர்ந்தே நழுவுகிறது நிகழ்காலமும்.

"காபி போடும்மா குளிருது "  என்றவாறே எனக்கு பிடித்த "காதல் ஓவியத்தை" கசிய விடுகிறாய். "இந்த மழை விடாது போல" என்று உன் அம்மா  உரைக்கையில் எந்த சொற்களையும் தேடி அலைய அவசியமின்றி என்மீது பார்வையை மட்டும் திருப்பி உயிரின் ஆழத்தை உற்று நோக்குகிறாய்.

வெளிவரா வார்த்தைகள் தொண்டைக்குழியில் ஊசலாட மழையை கண்களால் விழுங்கத்துவங்குகிறேன். மழை வாசல் தாண்டி என்னுள் இறங்கத்துவங்குகையில் வானவில்லாய் மனது வளைந்து உன்னைத் தொடுகிறது.

பருகி முடித்த தேநீர் கோப்பையினை விரல் தீண்டி வாங்குகையில் ஈரம் தோய்ந்த உடலெங்கும் வேகமாய் பரவுகிறது அதிர்வலைகள் . உலர்ந்து போன இதழ் பிரித்து கிளம்புகிறேன் என கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டு நகர்கிறேன் .

ஒவ்வொரு துளிகளையும் மறுக்காமல் ஏந்திக்கொள்ளும் நிலம் போலவே என்னை இன்றும் ஏந்திக்கொள்கிறாய். ஒவ்வொரு நாளும் புதுமுகம் காட்டும் மழையாய் நானும் , சலிக்காமல் ஏற்றுக்கொள்ளும் நெகிழ்நிலமாய் நீயும் என  இன்றும் நீ , நான் , மழை, ஒரு தேநீர் கோப்பை தேநீர் என சலியாமல் தொடர்கிறது வாழ்வு .

Tuesday 28 April 2015

துளிதுளியாய்....

யாவரும் உறங்கும்
பின்னிரவிலும்....
ஏதேதோ பயணங்களிலும்...
ஒவ்வொரு கோப்பை
தேனீர் பருகுகையிலும்....

உறங்கா நினைவுவழி
பயணித்து துளித்துளியாய்
உள்ளிறங்குகிறாய் ...!!!

Monday 27 April 2015

பூப்பது ஒன்றே வாழ்வென ....

எத்தனை முறை
வெட்டி விட்டாலும்
பூப்பது ஒன்றே
வாழ்வென ......

தெருமுனை டீக்கடை
வாசலில்
நட்சத்திர பூக்களை
உதிர்த்த படியே இருக்கிறது .....

நந்தியாவட்டை மரம்.....

Thursday 23 April 2015

அசைப்பதை கூட....

அசைப்பதைகூட நிறுத்தி
உறைந்து போன
தொட்டிச்செடிகள்....

கருமையும் தூசியும்
படிந்து பலவீனமாய்
நிற்கும் நாவல்மரம்....

வால்பேப்பரில் மட்டுமே
கொட்டிக் கொண்டு
இருக்கும் அருவி.....

இவ்வாறான நகரின்
அலுவலகத்தில்
நான் மட்டும் எப்போதும்
பசுமை கோப்பைக்குள்....

Tuesday 21 April 2015

வானப் பெருவெளி ......

அன்பு கொண்டு
மொய்க்கும் கண்களுடன்
உன்னை கேட்கிறேன்
உனக்கு நான் யார்?
சொல் என்கிறேன் ....

நீ என் நினைவும் மறதியும்
அப்புறம்?....
நீ என் பசியும் தாகமும்
அப்புறம்?....
நீ என் வாழ்வும் உயிரும்
அப்புறம்?....
நீ என் நான் நானே நீ
அப்புறம்?....

இன்னும் என்ன சொன்னால்
திருப்தியுறுவாய் என்கிறாய்....
சிரிப்புடன் நகர்ந்தவளை
நீ சொல்லேன் என்கிறாய்....

ம்...நீ எனக்கு எல்லைகளற்ற
வானப் பெருவெளி....
நீ என் கரைகளற்ற
பெருங்கடல் .....

Monday 20 April 2015

பொம்மைக்காரன்....

திருமண வீட்டில்
சிரித்தபடி கைகுலுக்கும்
இந்த பொம்மைகாரனின்
நிஜ முகத்திலும்
இதே சிரிப்பு
ஒட்டி இருக்குமா?.......