Sunday, 21 June 2015

வாழ்தலை அளிப்பள்

பாலையில்
தனித்திருப்பவனுக்கு
ஒற்றை மரம் தரும்
வாழ்வின் மீதான
நம்பிக்கையை
தருபவளல்ல அவள் ...

பற்றற்று
தனித்திருக்கையில்
நெற்றி கேசம் வருடி
முத்தமிட்டுச் செல்லும்
காற்றாய்
வாழ்தலை அளிப்பவள்
அவள்....!!!

Thursday, 18 June 2015

அப்பாக்களின் தினம்

அப்பா என்ற உறவை இப்படித்தான் இருந்திருக்கக்கூடும் என உணர்வாய் உணர்ந்திருக்கிறேனே ஒழிய அனுபவப்பூர்வமாய் உணர்ந்ததில்லை.அப்பாவின் பத்திரப்படுத்தப்பட்ட துணிகளிலும், டைரிகளிலும், தொங்கு மீசையில் கர்வத்துடன் சிரிக்கும் போட்டோக்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை .

அப்பாவின் உயிரின் துளியில் விதைக்கப்பட்டும் ஆதரவாய் பொத்தி வளர்க்கப்பட்ட வரம் வாய்க்கப்பெறவில்லை. அப்பா கை பிடித்து பள்ளிக்கும் , கால் பிடித்து மணவறைக்கும் சென்றதில்லை.

ஒவ்வொருமுறையும் அப்பாவிற்கு திதி அளிக்கையிலும் பொண்ணா பிறந்து திதி குடுக்கறா பாரு அப்பனைப் போலவே தெனாவட்டு என்போரின் வசவுகளிலும், ராஜ் அண்ணா போலவே குரலும் தெளிவும் என்ற அத்தைகளின் பாராட்டுகளிலும்,    அப்பனைப் போலவே எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு என் உயிர வாங்க பொறந்திருக்கு பாரு என்ற அம்மாவின் புலம்பல்களிலும் கண்டிருக்கிறேன் அப்பாவை.

என் பிள்ளைகள் இன்றைக்கு பள்ளி கிளம்புகையில் எல்லாம் அடிக்கடி அம்மா சொல்வது உங்க தாத்தா அந்தகாலத்துலயே ஏற்காடு மான்போர்ட் ஸ்கூல்ல படிச்சாரு தெரியுமா ? சென்ற வருடத்தில் ஓர்நாள் அம்மா நாளைக்கு ஏற்காடு பிக்னிக் போறோம் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பிட்டாங்க. அப்பா படிச்ச ஸ்கூல் வாழ்ந்த எஸ்டேட் எல்லாம் பாத்துட்டு வந்ததும் அம்மா ரெண்டுநாள் இருந்த அமைதி பயத்த உண்டாக்கிடுச்சு.

உனக்கு சாவித்ரினு பேர் வைக்கனும்னு கெஞ்சுனேன் உங்கப்பாட்ட அப்புறம் எல்லோரும் சாவி சாவி என் பொண்ண கூப்பிடுவாங்கன்னு சக்தினு வச்சாரு அப்டின்னு இன்னமும் சலிச்சுப்பாங்க அம்மா. அண்ணணும் இறந்துபோன இரண்டாம்நாளில் நீ கூட என் பையன காப்பாத்தி குடுக்கலயேன்னு அப்பாவ திட்டிட்டே பழைய டிரங்கு பெட்டில இருந்த அவரோட பொருள் அவ்வளவையும் அம்மா தீயிட்டு கொளுத்துனப்பாதான் அப்பா செத்துப்போனதா நினைச்சு முதன்முதலா அழுக வந்துச்சு .

முதிர்ந்த மரத்தின் வேர்கள் போல் மண்ணில் ஊன்றவும் பெருத்த பறவையின் சிறகுகள் போல் விண்ணில் அலையவும் என் தகப்பன்தான் கற்றுக்கொடுத்தான் அப்படின்னு எங்கயோ படிச்சுருக்கேன். அந்த விஷயத்துல என் பொண்ணுங்க மாபாக்யசாலிங்க.

Tuesday, 16 June 2015

கொன்று விடலாம் என்றிருக்கிறேன்

கொன்று புதைத்துவிடலாம்
என்றிருக்கிறேன் ...

கசியும் ப்ரியங்கள்
வழித்தெடுத்து
கண்ணிமைகளால்
என் உயிரெங்கும்
வர்ணம் பூசும்
காதல் விடுத்து ...

வேள்வி கண்ட
யாகசாலை போல்
மனம் தகிக்கையில்
உன் நெஞ்சுக்கூட்டில்
புதைத்திறுக்கி
உயிர் நெய்யும்
தருணம் தவிர்த்து ....

இதழ்களில்
நீ எழுதும்
வார்த்தைகளை
கொன்றுப் புதைக்கலாம்
என்றிருக்கிறேன் ...!!!

Wednesday, 10 June 2015

ஒற்றைச்சொல்

நீ வீசி எறியப்போகும்
ஒற்றைச் சொல்லுக்காய்...

ததும்பி வழிய
காத்திருக்கிறது ...
கரை கட்டி நிற்கும்
மனக்குளம்...

அதிகபட்சம்
நாநுனியில்
என் பெயரையாவது
உச்சரித்து விட்டுப்போ...!!!

Monday, 1 June 2015

மரணம் மிக சுலபம்

ஒரு மனிதனின் பெரும் நம்பிக்கைகளும் கனவுகளும் கலந்து உருவான வாழ்க்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிலரது அலட்சியத்தாலும் அவசரத்தாலும் வாகன விபத்தாக மாறி அவனை அழித்துவிட்டிருக்கிறது. வாகன விபத்துகள் குறித்த அச்சம் மேலோங்கி நிற்க காரணம் என்ன?

    எதிர்பாராமல் நிகழ்ந்தது சாலை விபத்துக்களா இல்லை சாலை பலிகளா? செத்துக்கிடப்பவன் எத்தனை கனவுகளுடன் சென்றிருப்பான்? எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்வை இறுகப் பற்றியிருப்பான்? எதற்காக இவன் உயிரிழந்திருக்க வேண்டும்? இவன் உயிர் நீங்கி தேவையற்ற பொருளாய் இங்கு கிடக்க வேண்டிய காரணம் என்ன?

எதற்கு அம்மா அழுகிறாள் என அவளைத் தேற்றும் மூத்தவளையும் , ஏதும் அறியாமல் கம்பியில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இளையவளையும் கண்டு, மீதமிருக்கும் வாழ்வின்மீது பெரும்பயம் கொண்டவளாய் விடிய விடிய ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கிறாள் ஜீவனற்ற விழிகளோடு.

எந்த கேள்விகளுமற்று நழுவிச் செல்லும் கணங்களுக்கு இடை இடையே எழும் ஒப்பாரிச்சத்தங்களும் , விபத்து குறித்த படங்கள் அலைபேசியில் பரிமாறப்படுதலும், பேசிப்பேசி மாய்ந்து போகும் உறவுகளுக்கு இடையிலும் நகர்கின்றன நிமிடங்கள் .

இரண்டாம் முறையாய் பிணவறை வாசலில் உறவுகளால் மஞ்சள் அப்பி பூச்சூடி திலகமிடப்பட்டு அலங்கரிக்கையில் அவளும் உயிரற்றவளாகவே அமர்ந்திருக்கிறாள் . உள்ளிருந்து உடல் பிளக்கும் சப்தம் வெளிக்கசிகையில் அனைத்து முகங்களிலும் துயர் கசிகிறது .

நிற்கும் வாகனங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட அதில் ஒன்றினை பாய்ந்து வாங்கி அதிலிருக்கும் அவன் படத்தை வெறிக்கிறாள் அவள். அப்பாவ என்கிட்ட குடு நான் பத்திரமா வச்சுக்கறேன் என்றவாறே எட்டாய் மடித்து சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறாள் மகள்.

இனி அவர்கள் எதிர் கொள்ளும் கஷ்டத்தை விடவும் அதை மூடி மறைக்க அவர்கள் படப்போகும் பெருந்துயரமும் , அவமதிப்பும், வலிகளும், பற்றின்மையும் அவன் இறப்பை விட வலி மிகுந்ததாய் இருக்கக்கூடும் . வாழ்வின் மீதான பற்றுதல்களை இந்த சாலை விபத்து ஓர் நிமிடத்தில் அபத்தமான ஒன்றாக மாற்றிவிட்டிருக்கிறது. மரணம் மிக சுலபம் போல .

எல்லாம் முடிந்து வெளிவந்து புகைகூண்டில் இருந்து வெளியேறும் கரும்புகை காண்கையில் உயிரும் இவ்வாறே எந்த சப்தமும் சலனமும் இன்றி வெளியேறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஒலிபெருக்கியில் கசிகிறது" பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே?