Tuesday 28 April 2015

துளிதுளியாய்....

யாவரும் உறங்கும்
பின்னிரவிலும்....
ஏதேதோ பயணங்களிலும்...
ஒவ்வொரு கோப்பை
தேனீர் பருகுகையிலும்....

உறங்கா நினைவுவழி
பயணித்து துளித்துளியாய்
உள்ளிறங்குகிறாய் ...!!!

Monday 27 April 2015

பூப்பது ஒன்றே வாழ்வென ....

எத்தனை முறை
வெட்டி விட்டாலும்
பூப்பது ஒன்றே
வாழ்வென ......

தெருமுனை டீக்கடை
வாசலில்
நட்சத்திர பூக்களை
உதிர்த்த படியே இருக்கிறது .....

நந்தியாவட்டை மரம்.....

Thursday 23 April 2015

அசைப்பதை கூட....

அசைப்பதைகூட நிறுத்தி
உறைந்து போன
தொட்டிச்செடிகள்....

கருமையும் தூசியும்
படிந்து பலவீனமாய்
நிற்கும் நாவல்மரம்....

வால்பேப்பரில் மட்டுமே
கொட்டிக் கொண்டு
இருக்கும் அருவி.....

இவ்வாறான நகரின்
அலுவலகத்தில்
நான் மட்டும் எப்போதும்
பசுமை கோப்பைக்குள்....

Tuesday 21 April 2015

வானப் பெருவெளி ......

அன்பு கொண்டு
மொய்க்கும் கண்களுடன்
உன்னை கேட்கிறேன்
உனக்கு நான் யார்?
சொல் என்கிறேன் ....

நீ என் நினைவும் மறதியும்
அப்புறம்?....
நீ என் பசியும் தாகமும்
அப்புறம்?....
நீ என் வாழ்வும் உயிரும்
அப்புறம்?....
நீ என் நான் நானே நீ
அப்புறம்?....

இன்னும் என்ன சொன்னால்
திருப்தியுறுவாய் என்கிறாய்....
சிரிப்புடன் நகர்ந்தவளை
நீ சொல்லேன் என்கிறாய்....

ம்...நீ எனக்கு எல்லைகளற்ற
வானப் பெருவெளி....
நீ என் கரைகளற்ற
பெருங்கடல் .....

Monday 20 April 2015

பொம்மைக்காரன்....

திருமண வீட்டில்
சிரித்தபடி கைகுலுக்கும்
இந்த பொம்மைகாரனின்
நிஜ முகத்திலும்
இதே சிரிப்பு
ஒட்டி இருக்குமா?.......

Sunday 19 April 2015

அருவியின் முன்னே....

அருவியின் முன்னே
  வயதும் பேச்சும்
ஒடுங்கி விடுகிறது .....

மெல்லிய நடுக்கமும்
   கள்ளச் சிரிப்பும்
ஒட்டிக் கொள்கிறது .....

ஈரத்திற்குள் என்னை
  பொருத்திக் கொண்டு
நனையும் போது....

ஆச்சரியத்தை கூட்டிக்கொண்டு
   பேசிக்கொண்டே இருப்பது
அருவி மட்டுமே .....

Saturday 18 April 2015

ஓர் வெயில் நாளில்......

இன்றைய வெயில் நாளில் காலை முதலே அவசரகதியில் கிளம்பி அலுவலகம் புகுந்து வேலைகளில் கவனம் கொண்டு மூழ்கியிருக்கையில் கவனம் பிறழ்கிறது ஓர் நிகழ்வில்.

மரங்களற்று போன பிரதான சாலையில் இருந்து விலகி மரங்களடர்ந்த எங்கள் வளாகத்திற்குள் அமைந்த மரத்தடியில் தஞ்சம் புகுந்திருந்தனர் துப்புறவு மற்றும் சாக்கடை தொழிலாளர் என அறுவர் .

என் ஜன்னலோரத்தில் அந்த மரம் அமையப்பெற்றதால் சிறிது கவனத்தை அவர்கள்மேல் கொண்டே வேலை செய்கிறேன்.

சற்று நேரத்தில் ஏழாமவன் கையில் சில உணவு பொட்டலங்களுடன் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.வட்டமிட்டு அமர்ந்து அவர்கள் சாப்பிட துவங்கியதும் கேலியும் கிண்டலுமாக உள் இறங்குகிறது உணவு.

அதில் ஒருவன் "கருப்பங்கடைல வாங்கலியா...உவ்வே இது நல்லால்ல" என பழிப்பு காண்பிக்கிறான். சிறிது சிறிதாக வேலை மறந்து அவர்களை வேடிக்கை பார்ப்பதில் லயிக்கிறது மனது.

இரண்டு பீடிகள் பற்ற வைக்கப்பட்டு எழுவர் கைகளிலும் மாறி மாறி வலம் வருகிறது.நாகரிகம் என கருதி பேச்சும் சிரிப்பும் அளவெடுக்கப்படும் இன்றைய சூழலில்,  அவர்களின் வெள்ளந்தி சிரிப்பும் , கேலியும் கிண்டலும் மனதினில் ஏக்கத்தை விதைக்கும் வேளையில் .....

நான் பார்ப்பதை கவனித்த ஓருவன்" அவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் போலடா , கிளம்பலாம்" என்றதும் அனைவரும் திரும்பி என்னை பார்க்கின்றனர்.

வேண்டாம் என கூவும் மனதினை கட்டுப்படுத்திக் கொண்டு ஏதுமறியாதவள் போல கணினியை உற்று நோக்குகையில் மீண்டும் எங்கிருந்து துவங்குவது பணியை என குழம்புகிறது மனது.

Friday 17 April 2015

அதிகாலை தேநீரின் மணம்
நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது ....
எங்கோ தொலைவில் உள்ள
எனது நண்பனை.....

Wednesday 15 April 2015

வருண் தங்கம்......

இன்றுடன் வருண் குட்டி பிறந்து சரியாக ஆறு மாதங்கள் ஆகிறது. அவனை கொஞ்சிக்கொண்டிருப்பது அலாதி ப்ரியம் . சில நாட்கள் பார்க்காமல் இருந்தாலும் அவன் எங்கள் ஊரில் இருந்ததே திருப்தி எனக்கு.

     எவ்வளவு குழந்தைகளை கொண்டாடி இருப்பினும் பிறந்த மறுநிமிடம் கையில் ஏந்தியது வருண் தங்கத்தை மட்டுமே.

    கைகளில் வெம்மையும் வெதுவெதுப்புமாய் நிறைந்திருந்தான்.என்னைப்போல் அவனும் உணர்ந்து கொண்டானோ தெரியவில்லை பால் வெண்மையான கண் திறந்து என் முகம் பார்த்தான்.

     அடர் ரோஜா நிற உதடுகள் , வெளிர் ரோஜா நிற கன்னம், பஞ்சு போல் காது, உதட்டில் ஒளிந்திருந்த சிரிப்பு என அதுவரை கௌரிக்காக நான் பட்ட பதட்டதினை மறக்கச் செய்திருந்தான்.

     சின்னஞ்சிறு விரல்களால் என் கைவிரல்களை இறுகப் பற்றி என்னை எடைகளற்றவளாய் மிதக்கச் செய்திருந்தான்.இன்று அவன் ஊருக்கு சென்று விட்டிருந்தாலும் அவன் வெம்மையும் அவன் இல்லாத வெறுமையும் கைகளில் ஓட்டக்கொண்டிருக்கிறது.

Wednesday 8 April 2015

பலூன்

உலக அதிசயங்களில் ஒன்றைப் போலவே என் கண்களுக்கு பலூன் தோன்றும்.எல்லோரிடமும் அப்படி ஒன்றானதாகவே காண்பிக்கவே பால்யங்களில் மனம் விழையும்.

சிறுமிகளை தேவதைகள் ஆக்கும் கலை பலூன் அறிந்த ஒன்று. பலூன் பறக்கத் துவங்கியதும் அதனுடன் மனமும் சேர்ந்தே மிதக்கத் துவங்கி விடுகிறது .

பால்யத்தின் கண்களுக்கு பலூன்காரன் மீட்பனாகவே காட்சியளித்தான்.கைகளில் வாங்கியதும் கால்கள் வீட்டில் நிற்பதில்லை.தெருக்கள் முழுதும் அதனுடன் சுற்றியலைந்தே நேரம் கழியும்.

உடைந்த பலூன் துண்டுகளை தேடி எடுத்து மீண்டும் பலூன் ஆக்கும் முயற்சியும், ஆசைகள் வெடித்துப் போகும் தருணங்களின் வலிகளையும் பால்யத்தில் கற்றுத் தந்ததும் பலூன்தான்.

பலூன் மீதான பார்வை யாவர்க்கும் ஒன்றானதாக இல்லாவிடினும், உடைந்து விட கூடாது என ஏங்கும் மனதும் அதன் இயல்பை மாற்றிக்கொள்ளாத பலூனும் வாழ்க்கைப்பாடங்களில் ஒன்றாகவே தெரிகிறது .


   





Tuesday 7 April 2015

வெயில்

ஓர் பூனையைப்போல்
ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்கிறது.....

கரைகளற்ற நதியைப்போல்
அனைத்து திசைகளிலும்
பாய்ந்தோடிச் செல்கிறது....

அகன்ற சிறகு விரித்து
தெருக்களில் தத்திப் பழகுகிறது
தன்னியல்பில் அலைந்து
திரியும் வெயில் .........

Monday 6 April 2015

விழிகளால் ......

நான்:

தேக்கி வைத்த
நினைவுகள் மொத்தமும்
விழிகொண்டே
பருகி விடுகிறாய் !....

அடுத்தும்
அடைமழை காலமே
காத்திரு!......

நீ:

ஆசை தீர
நனைந்தே
பருகிக்கொள்வேன்..!
உன் உத்தரவின்றி!!

Sunday 5 April 2015

பனைகளுக்கு நடுவில்.....

பனைகளுக்கு நடுவில்
     ஒளிந்து கொள்கிறாய்
அலைகளை போல ஒன்றுடன்
     ஒன்று கட்டிப் புரள்கிறாய்....

தண்ணீரின் மீது ஊர்ந்து
      நனையாமல் கடக்கிறாய்
எட்டிப் பிடிப்பதற்குள்
      கடந்தோடி விடுகிறாய்.....

கலைவதும் கூடுவதுமாய்
      என்ன அங்கே பேச்சு
எந்த நூற்றாண்டுகளின் கதையை
      பேசிக்கொள்கிறீர் மேகங்களே?....

Saturday 4 April 2015

கை விரல்களுக்கு .....

கை விரல்களுக்கு
இடையில் இடைவெளி
இருப்பதே .....

உன் கை விரல்களை
என்னோடு கோர்த்துக் கொள்ளத்தான்.......

Friday 3 April 2015

கண் இமையில் ......

கண் இமையில்
கரை கட்டி நிற்கும்
அழுகையும்.....

நா நுனியில்
பேச துடிக்கும்
வார்த்தைகளும்....

மௌனங்களும்
பேரன்புமாய்
நகரும் வாழ்க்கை........

Thursday 2 April 2015

ஹைக்கூ

அலைகளைப் போல்
பின்வாங்கி ஓடியது
இரவு...

உலகின் மீது தன் நிறத்தை
பூசத்துவங்கியது
வெளிச்சம்....

வீடு

வசிப்பதற்கானது
மட்டும் அல்ல
வாழ்தலுக்குமானது......
வீடு.....

Wednesday 1 April 2015

தேன்மொழி

நேற்று மாலை அலுவலகம் முடிந்து அத்தியாவசியமான சில பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் நுழைந்து, மாமாவின் இரத்தக்கொதிப்பு தாறுமாறாக எகிறும் அளவிற்கு கொஞ்சமாக சில பொருட்களை நிறைத்திருந்த வேளையில், யாரோ என்னையே பார்ப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தேன் .

        ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்த தேன்மொழி நின்றிருந்தாள்.ஆனந்த விகடனை புத்தகப்பையில் கொண்டுவந்து எனக்கு அறிமுகம் செய்தவள்.எப்பொழுதும் நேர்த்தியாய் வைத்த பூ வாடாமல் பள்ளிக்கு வந்து செல்வாள்.

       கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய் என கண்களில் ப்ரியம் வழியபேசிக்கொண்டோம்.அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு அவசரகதியில் விடை பெற்றோம்.

      நேரில் பார்த்தால் கூட பழைய அன்புடன் பேசிக்கொள்ள இயலாமல் சிறு புன்னகையுடன் கடந்து செல்லவும் , உயர்த்தப் படாமலேயே அசைக்கும் கை அசைவிலும் வாழ பழகிக்கொண்டோம்.

      இளம்பிராயத்தில் தூய்மையாய் சிரித்த சிரிப்புகளும், சொற்களின் அழகு கூடிய பேச்சுகளும் என மனம் பின்னோக்கி பயணிப்பதை தவிர்க்க முடிவதில்லை.இரவு முழுக்க ஆழ்தூக்கத்தை நிறைத்திருந்தாள் என் தோழி.

    உயர்த்திக்கொண்ட பொருளாதார வாழ்வின் உயரங்களுக்கு மத்தியில்,    சிறுபிராயங்களுக்கு அழைத்துச் செல்லும் இது போன்ற நிகழ்வுகள் மண்ணின் வாசம் நுகரச் செய்தல் போன்றது. உறுதியாகத் தெரிகிறது,  இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த நினைவில்  சுழலப் போவது......