Tuesday 31 March 2015

மணல்

வீடு திரும்பியும்
பிடிவாதமாய்
ஒட்டிக்கொண்டிருக்கும் மணல் நினைவுபடுத்துகிறது .....

வளர்ந்தும்
மனதில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பால்யங்களை....

Monday 30 March 2015

ஞாபக வனம்

உன் ஞாபக வனமெங்கும்
நினைவுப் பூக்களை
சிதறச் செய்து விட்டிருக்கும்
சிறு பூச்செடி நான்.....
பூப்பூத்தல் என் இயல்பு
வனம் காத்தல் உன் கடமை!

நனையாமல்.....

நனையாமல்
கடந்து செல்கிறது
மேகம்.....

அள்ளித் தேக்கிய
கைப்பள்ளத்தின்
நீரில்....




Sunday 29 March 2015

காற்று வெளியிடை .....

தலைவி :
தீயாய் தகித்து வழியும்
கண்ணீர் கொண்டே
நிரப்புகின்றேன் ....
உனக்கும் எனக்குமான
இடைவெளியை....

தலைவன்:
காற்று வெளியிடையே
இல்லை நமக்குள்..!
கண்ணீர் கொண்டு
நிரப்ப,
காதல் இடைவெளி
எங்கனம் வந்தது?

கறுப்பழகி

கறுப்பழகி......யாரோ ஓர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கையில் திரும்பிப் பார்த்தவளுக்கு, தன் சிறுவயதில் தன் பெயரும் இதுதானே என்ற ஞாபகம் துளிர்த்தது.

    "அம்மா கறுப்பழகிய பாரேன். குண்டு கன்னமும் சுருட்ட முடியுமா எவ்ளோ அழகா இருக்கான்னு" என்று கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்வான் அண்ணன். விடு அண்ணா வலிக்குது என்று சிணுங்கினாலும் அவன் சொல்லும் பொழுதுகளில் தன் சொந்த பெயரை மறந்தும் போவாள்.

     செக்கச்செவேலென்று இருக்கும் அத்தை ஓர் விருந்து நாளில் " என் பொண்ணுங்கள தொட்டு விளையாடதடி அப்புறம் உன் கறுப்பு ஒட்டிக்கும்" என்றபோது புரிந்தும் புரியாமலும் அண்ணணின் முகம் பார்த்தாள். "அது ஒண்ணும் இல்லடா கறுப்பழகி நம்ம அப்பா இல்லல்ல அந்த இளக்காரம் விடு பெரியவனாகி அண்ணன் இவங்கள பாத்துக்கறேன்"  என்றான் சமாதானமாய்.

    பிறிதொரு கோடை நாளில் தோழர்களுடன் சேர்ந்து தும்பைக்காட்டில் பட்டாம்பூச்சி பிடிக்க சென்றாள். தும்பை செடிகளை கொத்தாக கையில் பிடித்து மிக மெதுவாக பட்டாம்பூச்சியினை பிடிக்கையில், கையில் ஒட்டிக்கொண்ட அதன் வண்ணம் பார்த்து , தன் கன்னத்தையும் ஆட்காட்டி விரலால் தடவிப்பார்த்தாள்.

     வீடு திரும்பி, "நானும் பட்டாம்பூச்சியா அண்ணா" என்றவளிடம், "ஆமாண்டா நீ ராணி பட்டாம்பூச்சி"என்றான். ஆச்சரியத்தில் விழி விரித்தவளிடம்,  " கருப்பா இருக்கறதுதான் ராணி மத்ததெல்லாம் அதுக்கு கீழதான் " என்றான். அன்றிலிருந்து ராணி பட்டாம்பூச்சியாக மாறிப்போனாள் கறுப்பழகி.

     இன்று எவ்வளவு வளர்ந்து விட்டிருந்தாலும் தும்பைச்செடிகளையும் பட்டாம்பூச்சிகளையும் மறக்காதவள் ஏனோ தன் பெண்களில் ஒருத்தி மட்டும் சிகப்பாய் போனதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.

Friday 27 March 2015

தனித்தீவாக .....

பதின்பருவங்களில்
எவ்வளவு முயன்றாலும்
குழந்தைகள் தனித்தீவாக
மாறுதலை தவிர்க்க முடிவதில்லை...

கையில் மணலை அள்ளும்போது
அது விரல் இடுக்கில் சரசரவென
இறங்கும் அவசரம் போல
ஒரு அலாதியான வேகம்....

கனவு நுரைக்கும் கண்கள்
வளர வளர என்னை
பற்றிக் கொள்ளாத சுதந்திரம் ....
அனாயாசமாய் சுழலும் பேச்சு...

என்ன தேடுகிறேன்?
என்ன கண்டுகொண்டார்கள்?
என்னவாயினும் அதிகம்
நேசிக்கப்படுவதும் நான்தானே ....

விளையாட்டுச் சிறுமி....

களிமண்ணில் செய்த
மீன் பொம்மைகளை
வாளித் தண்ணீரில்

நீந்த விட்டுப்
பார்க்கும் விளையாட்டு
சிறுமியின் குணம்

எங்கிருந்தோ வந்து
ஒட்டிக்கொள்கிறது
ஞாயிற்றுக்கிழமைகளில்......

Thursday 26 March 2015

நீ இருக்கும்
திசை பார்த்துதான்
தினம் பூக்கிறேன்....
மூச்சுக் காற்றினை
அனுப்பியாவது
நலம் கேட்பாயா?....

அக்காற்றின்
பெருங்கரமாவது
என் அன்பின்
விதைகளை
உன்னுள்
விதைக்கட்டும்......

Wednesday 25 March 2015

இசையோடு துவக்கம்...

அதிகாலையை இசையோடு துவங்குதல் பெரும்வரம்.எனக்கு பிடித்த பாடல்களை கோர்வையாக கேட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளினையும் துவங்குதல் எனக்கு பிடித்தமான ஒன்று.நல்ல இசை மனதை தூய்மையாக்கி சந்தோஷத்தினை கையளிக்கவல்லது.
தத்தளிக்கும் வெற்றுப்படகினை, திசை மாற்றி ஆற்றின் போக்கோடு நகர்த்துதல் போன்றதே இசையோடு பயணித்தலும்.

மிருதுவான நூலைக்கொண்டு பலவண்ணமயமான உடையை நெய்து காட்டுவதுபோல இசையும் வெவ்வேறு விதமான உணர்வுகளை நமக்குள் விதைத்துவிடுகின்றது.

தேங்கிய உணர்வுகளை அசைத்து வெளியில் சொட்டிவிடச் செய்யும் கலை இசை அறிந்ததில் ஒன்று.கண்ணீரையும் சிறகுகளையும் நினைத்த மாத்திரத்தில் தரவல்லதும் இசைதானே.

ஒர் நொடியில் புல்லாங்குழலையும், சகல மனிதர்களின் சோகங்களையும், வாசனைகளையும் தரவல்ல இசையினை ரசிப்பதை விட அதனிடம் என்னை ஒப்புக் கொடுத்து அதில் நனைதலே சுகம்...